லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்த ரெய்டானது கே.பி அன்பழகனை குறிவைத்து இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களை வரிசைகட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். முதலில் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் பெயரோடு தற்போது இளங்கோவன் பெயரும் வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் இளங்கோவன் குறித்த பல தகவல்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
எடப்பாடியின் பெயரை பயன்படுத்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளிநாட்டில் கூட முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இது ஒரு பக்கமிருக்க அடுத்தது யார் என்ற கேள்வி அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல முன்னாள் அமைச்சர்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், சற்று அதிக பயத்தில் கேபி அன்பழகன் உள்ளாராம். ஏனெனில் லஞ்ச ஒழிப்புத் துறையை சமீபத்தில் எதிர்கொண்ட இளங்கோவனை வீடு தேடிப் போய் இருநாட்கள் கேபி அன்பழகன் சந்தித்துள்ளார்.
கேபி அன்பழகன், இளங்கோவனும் இணைந்து பல தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். இதனால் அடுத்த டார்கெட் கேபி அன்பழகன் ஆக இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெய்டு வந்தால் அதை எப்படி சமாளிப்பது? என்ன கேள்வி கேட்பார்கள்? என்பது குறித்தும் இளங்கோவனிடம் கேபி அன்பழகன் கேட்டு தெரிந்து கொண்டாராம். ரெய்டு நடப்பதற்கு முன்பும் அதற்கு பின்பும் கூட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், சனி ஞாயிறு என இரண்டு நாட்களும் கேபி அன்பழகன் இளங்கோவனை சந்தித்து பேசியிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது .