ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் மகனை அவரது நண்பர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் நவீன் தாஸ் என்பவரின் மகன் மணிஷ் அனுராக். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதால் நண்பர்கள் அனைவரும் அவரிடம் பேச்சிலர் பார்ட்டி வைக்கும்படி கூறியுள்ளனர். இதனால் மணிஷ் தனது நண்பர்கள் அம்ரித் ப்ரீதம் பிஸ்வால், தினேஷ் மொஹாபத்ரா மற்றும் முருத்யா ஆகியோரை அழைத்துக்கொண்டு கடந்த 10ஆம் தேதி ஒரு ஹோட்டலுக்கு சென்று மது விருந்து கொடுத்துள்ளார். விருந்து முடிந்த பிறகு பில் வந்தது. அதில் மொத்த பில் தொகை 8000 ரூபாய் என்று இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிஷ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூற, நண்பர்கள் அனைவரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மணிஷ் தனது தாயாருக்கு போன் செய்து பணம் அனுப்பும்படி கூறியுள்ளார். அவர் பணத்தை அனுப்புவதற்குள் குடிபோதையில் இருந்த அவரது நண்பர்கள் மணிஷை அடித்து உதைத்து கொலை செய்துவிட்டு அவரின் உடலை அங்குள்ள ஒரு குளத்தில் வீசி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிஷின் நண்பர்களை கைது செய்தனர்.