பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத்தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் அடுத்த மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் செய்முறைத்தேர்வு தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், பெரம்பலூர் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. சுழற்சி முறையில் இந்தக் கல்வி மாவட்டங்களில் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
அதன் பின் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகே ஆய்வுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், 40 அரசு பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நல பள்ளி என மொத்தம் 45 பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வும், 17 மெட்ரிக் பள்ளிகள் 12 தனியார் பள்ளிகள் என மொத்தம் 29 பள்ளிகளில் விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், உயிரியல் கணினி பயன்பாடு மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்த செய்முறை வருகிற 23-ஆம் தேதி வரை நடக்கிறது.