மதுரை ஒத்தக்கடை பகுதியில் தினேஷ் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில், கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆர்.பி.உதயகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிக அளவில் சொத்து குவித்துள்ளார். மேலும் தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மூலமாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், அம்மா டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினேஷின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புகார்தாரரான வழக்கறிஞர் தினேஷ் இன்று மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் குறித்த விசாரணைக்காக வந்தார். இதனையடுத்து புகார்தாரர் வழக்கறிஞர் தினேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் புகார் தன்மை குறித்தும், புகாரில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் தினேஷ், ஆர்.பி.உதயகுமார் பதவியில் இருந்த போது அம்மா டிரஸ் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் அதிக அளவிற்கான வருமானத்தை காட்டியுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.