கால நிலை மாறுபாடுகள் உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையில் நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்களும், கடல் ஆராய்ச்சியாளர்களும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம் ?
புவி வெப்பமயமாதல் உலகிற்க்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், மனித இனத்திற்கு பெரும் பாதிப்பு இருக்கும் என ஆராய்ச்சியாளர்களின் சில தரவுகள் கூறுகின்றனர். இதன் பெரும்பாதிப்பை தற்போது உணரத் தொடங்கி இருப்பதாகவும் அவர்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் விலங்கு சல்லி, பூவரசன் பட்டி தீவுகள் சமீபத்தில் மூழ்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் எதிர்காலத்தில் சென்னையையும் பாதிக்கும் நிலை இருப்பதாகவும், குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் ஈசிஆர், சோழிங்கநல்லூர் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் எனவும் எச்சரிக்கிறார் பூவுலக நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வெற்றி செல்வன்.
கிளைமேட் சென்டர் அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் கடல் நீர் மட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வருவதை உறுதி செய்துள்ளது. தொழிற்சாலை பயன்பாட்டின் மாசுகளையும், வாகனங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதையும் தவிர்க்க சீரிய முயற்சிகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடல் நீர்மட்டம் உயர்வை நாம் குறைக்க வில்லை எனில் சென்னையில் நிலத்தடி நீர் பாதிப்பும், டெல்டாவில் விவசாய நிலம் பாதிப்பு சூலம் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.