தமிழகத்தில் சில நாட்களாகவே வெயில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயில் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது ஊரடங்கு காலமென்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கு மத்தியில் இந்த வெயிலின் தாக்கத்தினால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக, வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.