சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி புதுவயல் கருநாவல்குடி பகுதியில் விவசாயியான பா.மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பகல் நேரத்தில் டெய்லராகவும், காலை மற்றும் மாலை நேரத்தில் தனது விவசாய வேலைகளையும் பார்த்து வருகிறார். இந்நிலையில் மணி 4.5 ஏக்கரில் வாழை, மல்லிகை, மிளகி நெல் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் குறித்து மணி கூறியதாவது, நான் ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். 10 மாதங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் வாழைத்தார் 200 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. ஆனால் அதற்கு பதிலாக வாழை இலையை வெட்டி விற்பனை செய்தால் மாதம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஒரு வாழையில் உருவாகும் 4 முதல் 5 பக்க கன்றுகளில் 15 இலைகள் வளரும்.
ஒரு வாழையில் மாதம் 900 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதன் மடல்கள் மாடு மற்றும் மாடுகளுக்கு உணவாகிறது. இதனையடுத்து வாழைகளுக்கு கீழே காய்ந்த இலைகளை மூடாக்கு போட்டு மட்க வைப்பதால் அது சிறந்த உரமாக மாறுகிறது. இந்த வாழையின் ஊடே சர்க்கரைவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளேன். இதற்கு எந்த வேலையும் கிடையாது. இதேபோல் 140 நாட்கள் கொண்ட பழங்கால ரகமான மிளகி நெல், சிவப்பு கவுனி போன்றவற்றை இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். மேலும் 40 சென்ட்டில் மல்லிகை பயிரிட்டுள்ளேன். விவசாயத்தை ஆர்வமுடன் செய்தால் நஷ்டம் இல்லாமல் அதிக அளவில் லாபத்தை பெறலாம் என மணி கூறியுள்ளார்.