கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் வீட்டின் முன் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்களும் குவிந்தனர். இதில் அவருடைய சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் 43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக 25 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி ரம்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய மகள்கள் மற்றும் மனைவி பெயரிலும் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.