தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆளும் கட்சியான திமுக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார். அதில் விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர், கோட்டக்குப்பம், விழுப்புரம் ஆகிய நகராட்சிகளுக்கும், திருவெண்ணைநல்லூர், வளவனூர், அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு அவர்களுடைய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் தஞ்சை மத்திய மற்றும் வடக்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம், திருநெல்வேலி தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக திமுக அறிவித்துள்ளது.