புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் மணிமேகலை(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினைப்பையில் புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அவருக்கு புற்றுநோய் குணப்படுத்தும் வகையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது மூளையில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் இரண்டு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இந்த கட்டிகளின் விளைவுகாக அவருக்கு தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்தது. அவரது உடல்நிலை அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டிகளை அகற்றப்படுவதை தாங்கும் சக்தி இல்லாததால் அவருக்கு எஸ்.ஆர்.எஸ் என்று அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவால் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி அரசு கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி டின் டாக்டர் சாந்தி மலர் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மணி ஆகியோரின் அறிவுரைப்படி கதிர்வீச்சு சிகிச்சை டாக்டர்கள் மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அதிநவீன மென்பொருள் மூலம் மிக துல்லியமாக புற்றுநோய் பரவிய மூளைத்திசுக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படாத வகையில் மிக துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை செய்து மூளையில் உள்ள இரண்டு கட்டிகளை அற்றினர். இதனையஎடுத்து சிகிச்சையின் போது மூளைக்கு பக்க விளைவுகள் வராதபடி “ஸ்டிராய்டு” சிகிச்சையும் கதிர்வீச்சின் போது கொடுக்கப்பட்டது. இந்த கதிர்வீச்சு அறுவை சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்டால் ரூ.4 லட்சம் வரை செலவாகும். இங்கே இந்த சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அந்த பெண்ணுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது. தற்போது அந்த பெண் தலைவலி குறைந்து நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.