கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசன் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அந்த மேல்நிலைப்பள்ளியில் அரசம்பாளையம் அருகிலுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் அரசம்பாளையம் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த மாணவர்கள் குமாரபாளையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசன் பாளையத்திற்கு இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு சென்று வந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு அந்த பாலம் அடைக்கப்பட்டது. அதனால் மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
இதுபற்றி பொதுமக்கள் பேசியதாவது, தற்போது நாங்கள் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள குறுகலான வழித்தடத்தில் ஆபத்தான பயணத்தை செய்து வருகிறோம். எனவே ரயில்வே அதிகாரிகள் மேம்பாலம் குறுக்கே மூடப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புகளை அகற்றி மாணவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். வரும் 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகள் திறக்க இருப்பதால் அதற்கு முன்பு அரசு அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள், குமாரபாளையம்- அரசம்பாளையம் இடையே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வழித்தடத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.