தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் நேற்று மாலை முதலே கன மழை வெளுத்து வாங்குகிறது.
அதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சென்னை அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாறுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பெருங்களத்தூர், தாம்பரம்,முடிச்சூர் மற்றும் மண்ணிவாக்கம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.