அட்சய திருதியை இந்து மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மரால் உலகம் உருவாக்கப்பட்ட நாள் தான் அட்சய திருதியை என்ற இந்து மக்களால் நம்பப்படுகின்றது. விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மே 3ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது.
அட்சய திருதியை நாள் வீட்டுக்கும் குடும்பத்திற்கும் அதிர்ஷ்டம் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. அன்றைய நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் இந்து மக்கள் லட்சுமியை வணங்கி செல்வமும் வளமும் பெருக வேண்டும் என்று வழிபாடு செய்வார்கள். அதனைப்போலவே குடும்பத்திற்கு மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டமும் சேர வேண்டும் என்று விஷ்ணுவை வணங்குவார்கள்.
வழிபாடு தவிர வேறு எந்த வகையில் அட்சய திருதியை முக்கியத்துவம் பெறுகிறது என்றால்,இந்த நன்னாளில் இந்து மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது வழக்கம். அதாவது அன்றைய நாளில் தங்கம், வெள்ளி மற்றும் நகைகள் வாங்கினால் அவை பல மடங்கு பெருகும் என நம்பப்படுகிறது. எனவே அட்சய திருதியை பண்டிகையின்போது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற நகை வியாபாரம் களைகட்டும்.
இந்த வருடம் அட்சய திருதியை மே 3ஆம் தேதி வரவுள்ள நிலையில் நல்ல நேரம் அதிகாலை 5.18 மணிக்கு தொடங்கி மே 4ஆம் தேதி காலை 7.32 மணிக்கு முடிவடைகிறது. மே 3ஆம் தேதி லட்சுமியையும் விஷ்ணுவையும் வழிபடுவதற்கு காலை 5.39 மணி முதல் 12.18 மணி வரை உகந்த நேரமாகும்.இருந்தாலும் அக்ஷய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை வாங்குவதற்கு முழு நாளும் நல்ல நேரம்தான்.