காட்டு யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செலுக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள், மாணவ-மாணவிகள், கிராம மக்கள் என பலரும் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த காட்டு யானைகள் சில நேரங்களில் விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் யானையை விரட்டியடித்தாலும் மீண்டும் ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே காட்டுப் பகுதியில் பசுந்தீவனங்களை அதிகரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.