நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மார்தோமா நகரில் இருந்து புத்தூர் வயல் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த 25-ஆம் தேதி சிறுத்தை தாக்க முயன்ட்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் கூடலூர் அரசு கல்லூரியில் சுசிலா(18) என்பவர் படித்து வருகிறார். மாலை நேரத்தில் சுசீலா கூடலூரில் இருக்கும் ஜவுளி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்தது வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 8:45 மணியளவில் வேலை முடிந்து சுசீலா ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த சிறுத்தை சுசீலாவை தாக்கியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த வழியாக சென்ற சிலர் சுசீலாவை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், வன சரகர் ராஜேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் சுசீலாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை அந்த சாலை வழியாக செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.