பர்தாமன் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷேக் ஹீரா. இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சமீபத்தில் 270 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டு வாங்கி அவருக்கு 1 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு லாட்டரி விழுந்துள்ளதாகவும், அந்தப் பணத்திற்கு பாதுகாப்பு தருமாறும் கேட்டுள்ளார். அதன்படி, காவல்துறையினரும் ஷேக் ஹீராவை பத்திரமாக வீடு வரை அழைத்து சென்று விட்டுள்ளனர்.
லாட்டரி விழுந்தது குறித்து அவர் பேசுகையில், தனக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் எப்போதும் உண்டு. என்றைக்காவது ஒரு நாள் லாட்டரி விழும் என்ற கனவுடன் அதை வாங்குவதாகவும், ஆனால் இவ்வளவு சீக்கிரமாக அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் இந்த பணத்தை வைத்து முதலில் தனக்கு இருக்கும் கடனை அடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து இந்தப் பணத்தை வைத்து வீடு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் தாய்க்கும் தரமான சிகிச்சை அளிப்பேன் என்றும் ஷேக் ஹீரா கூறியுள்ளார். இதையடுத்து, லாட்டரி விற்பனையாளரான ஹனீப் பல வருடங்களாக லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும், தன்னிடம் லாட்டரி சீட்டு வாங்கிய பலருக்கு பரிசு தொகை விழுந்து இருந்தாலும், இவ்வளவு பெரிய தொகையை யாருக்கும் கிடைத்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னிடம் லாட்டரி சீட்டு வாங்கிய ஹீரோவுக்கு 1 கோடி ரூபாய் பரிசாக விழுந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.