சீன அரசு இயற்கை உரம் தொடர்பாக எடுத்த அதிரடியான நடவடிக்கையின் விளைவாக அந்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய சுமார் 51.28 கோடி ரூபாயை இலங்கை கொடுப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் விவசாயத்திற்கு ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இதன் விளைவாக இலங்கை அரசாங்கம் சீனாவிலுள்ள கிங்காடோ சீவீன் பயோடெக் என்ற உர நிறுவனத்திடமிருந்து இயற்கை உரங்களை வாங்கியுள்ளது. இதனையடுத்து சீனாவிலிருந்து வந்த இயற்கை உரங்களை இலங்கை ஆய்வு செய்ததில் அதில் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆகையினால் இலங்கை அரசாங்கம் அந்த உரங்களை இறக்குமதி செய்யாததையடுத்து அதற்காக கொடுக்கவேண்டிய தொகையையும் வழங்க மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சீனா தங்களுக்கு உரம் தொடர்பாக பணம் தரவேண்டிய இலங்கையின் முன்னணி வங்கியான பீப்பில்ஸ் பேங்கை அதிரடியாக கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இதனையடுத்து ஸ்ரீலங்கா சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்நாட்டிற்கு கொடுக்கவேண்டிய பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி மேல் குறிப்பிட்டுள்ள இலங்கையின் முன்னணி வங்கி சீனாவிற்கு கொடுக்க வேண்டிய 51.28 கோடி ரூபாயை விரைவில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.