இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மாநில அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று முன்பு அறிவித்து இருந்தது. ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அங்குள்ள ஜபுல்பூர் நகரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.