சென்னையில் ஓலா போன்ற வாகனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது அதுபோன்றுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றது. வழக்கமாக எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் ஆட்டோ அல்லது கார் தேடிச்சென்று புக்கிங் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப கட்டணத்தை கூட்டி குறைத்து பேசுவார்கள். இதனால் பேரம் பேசத் தொடங்கி வாக்குவாதம் ஏற்படும், நேரமும் விரயம் ஆகும்,
இதனால் ஓலா, உபர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்களின் வசதியை பொதுமக்கள் அதிக அளவில் நாடி செல்கின்றனர். ஏனெனில் சம்பந்தப்பட்ட ஆப்பில் முன்பதிவு செய்து கொண்டால் குறிப்பிட்ட வாகனம் அதற்கான கட்டணம் என்று தனித்தனியே காட்டிவிடும். இதனால் நாம் யாரிடமும் பேரம் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. ஆப்பில் காட்டும் கட்டணத்தை செலுத்தினால் மட்டும் போதும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது.
சென்னையில் ஓலா போன்ற வாடகை ஆட்டோக்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காரணத்தினால் ஓட்டுநர்கள் அதிக கட்டணம் கேட்டு தொல்லை தருகிறார்கள். குறிப்பாக ஓலா ஆட்டோ பயன்படுத்தும் போது இத்தகைய பிரச்சனை அதிகம் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக ஓலா முன்பதிவு செய்யும்போது 140 ரூபாய் காண்பிக்கின்றது என்றால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் 200 ரூபாய் கொடுத்தால் தான் வருவேன் என்று தெரிவிக்கின்றனர். ஏன் என்று கேள்வி கேட்டால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கூறுகின்றனர். அப்புறம் எதற்காக 140 ரூபாய் காண்பிக்கின்றது என்று கேட்டால் விருப்பம் இருந்தால் வாருங்கள் இல்லை எனில் கேன்சல் செய்துவிட்டு போய்விடுங்கள் என்று கறார் காட்டுகின்றன.
ஒருவேளை பயணத்தை ரத்து செய்தாலும் அதற்கு கேன்சல் கட்டணமாக 25 ரூபாயைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவோரை விட, கையில் காசு தருவோருக்கு தான் ஓட்டுநர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதிலும் இறங்கும் நேரத்தில் கட்டணம் அதிகம் தர மறுத்தால் மிக மோசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர். இந்த பிரச்சனை ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் சந்திக்கின்றனர். இது தொடர்பாக நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம் என்றால், அப்படி ஒரு ஆப்ஷன் இல்லை என்று கூறுகிறார்கள் வாடிக்கையாளர்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஓலா மட்டுமல்லாமல் வேறு சில நிறுவனங்களின் ஓட்டுனர்களும் இதுபோன்று வசூல் அட்ராசிட்டியில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.