உலகம் முழுதும் கடல் பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் தேசிய கடல்சார் சூழலில் நிர்வாகம்( என்.ஓ.ஏ.ஏ.) என்ற அமைப்பு சார்பாக விஞ்ஞானிகள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது அட்லாண்டிக்கடலின் ஆழமான தரைப் பகுதியில் மர்மான துளைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2,540 அடி ஆழத்தில் வரிசையான முறையில் அமைந்து இருக்கும் இந்த துளைகள் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த துளைகள் மனிதனால் உருவாக்கப்பட்டதை போல் தோன்றினாலும், கடலின் அடிப் பகுதிக்குச் சென்று எந்தவொரு மனிதராலும் இப்படி துளைகளை அமைக்க முடியாது. ஆகவே சுற்றி இருக்கும் வண்டல் குவியல்களால் இந்த துளைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருந்தாலும் தொடர்ச்சியான ஆய்வுகள் வாயிலாக இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.