தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் சிலவற்றை அறிவித்தது. அதில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அவ்வாறு மாதாந்திர மின்சார கணக்கீடு அமலுக்கு வந்தால் மின் கட்டணம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கணக்கீடு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் (telescopic tariff) என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். 101 – 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 2 ரூபாய். 201 – 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயாகும்
உதாரணமாக ஒரு வீட்டில் 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 200 யூனிட்கள் வரை யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் கட்டணம். இதன்படி 200 ரூபாய் வசூலிக்கப்படும். 201 – 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயாகும். 201 – 400 யூனிட்களுக்கு கணக்கிட்டால் 600 ரூபாய் கட்டணம் வருகிறது. மின்சார இணைப்புகான நிலையான கட்டணம் 30 ரூபாயையும் சேர்த்து அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் பயன்படுத்திய மின்சாரத் தொகை 30+ 200+600 = 830 ரூபாய் ஆகும்.
இரண்டு மாதங்களுக்கும் சேர்ந்து 400 யூனிட் பயன்படுத்துபவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு 100 யூனிட் மட்டுமே இலவசமாக கிடைக்கும். மீதம் 300 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதே 500 யூனிட் பயன்படுத்துபவர்கள் 400 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த முறையில் கட்டணமும் அதிகம்.
இதே மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் கணக்கிடும்போது என்னவாகும்? தற்போது 520 யூனிட் பயன்படுத்துவோர், மாதம் ஒரு முறை கணக்கிட்டால் சராசரியாக 260 யூனிட் பயன்படுத்துவார்கள். இதில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் எனும்போது, 160 யூனிட்டுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் நிலை வரும், கட்டணமும் குறையும். இதனால் தான் மாதாந்திர கட்டண கணக்கீடு முறை எப்போது அமலுக்கு வரும் என்று மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.