மெக்சிகோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி.
மெக்சிகோ நாட்டில் அதிக அளவில் போதை பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மிச்சோகன் மாநிலத்தில் உள்ள சன் ஜோஷி டி கிரேசியா நகரில் நடைபெற்ற இறுதிசடங்கில் சிலர் பங்கேற்றனர். அப்போது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 பேரை அங்கு துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல் அருகே உள்ள சாலைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் பட்டப்பகலில் அவர்கள் அனைவரும் நடுரோட்டில் பிணைக்கைதிகள் போல் பின்புறம் கைகளைக் கட்டியவாறு திரும்பி நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் இந்த சம்பவத்தை அங்குள்ள தெருவில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர் தனது மொபைல் மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.