தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திமுகவினர் மேடையில் ஏறி வன்முறையில் ஈடுபட்டனர். அதில் பேச்சாளர் ஹிம்லர் மற்றும் மேடையில் இருந்தவர்களை தள்ளி விட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவினருக்கும் நாம் தமிழன் கட்சிக்கும் இடையே சமீப காலமாக கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதாவது சமூக வலைத்தளங்களில் இருகட்சிகளும் மாறிமாறி வசை பாடி வருகின்றனர்.
இந்நிலையில் இரு கட்சியினருக்கும் இடையே முதல் முறையாக நேருக்கு நேராக தகராறு ஏற்பட்டது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹிம்லர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் விளக்கியுள்ளார். அதில், “உங்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களை ஏன் நீங்கள் தாக்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர். அவர் என்னுடைய தாத்தா வயதில் உள்ளார். அவரை நான் எப்படி அடிக்க முடியும். அந்த அளவுக்கு நான் தரம் கெட்டவன் அல்ல. அவர் வேண்டுமானால் பேரம் வயதில் இருப்பவரை அடிக்கக் கூடிய அளவுக்கு நிதானம் இல்லாமல் இருந்திருக்கலாம். அவர் செய்த தவறை நாமும் செய்யவேண்டும் என்பதில்லை நமக்கு ஆயிரம் வேலைகள் உள்ளது” என்று ஹிம்லர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை நாம் தமிழர் கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.