இந்திய அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற சொல்லை தமிழக முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள் பயன்படுத்தி வருவதற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசு என்ற சொல் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறிய நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்திய அரசைக் குறிக்க எந்த சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கோ, அமைச்சர்களுக்கோ உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்திய அரசை இதுவரை மத்திய அரசு என்று கூறிவிட்டு தற்போது ஒன்றிய அரசு என்று அழைப்பதே நாம் பார்க்கிறோம். ரோஜாவிற்கு எந்த பெயர் வைத்தாலும் அதனுடைய வாசத்தை மாற்றவே முடியாது. அதே போல மத்திய அரசசை எந்த பெயர் வைத்து அழைத்தாலும் அது மத்திய அரசின் அதிகாரத்தை யாராலும் குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் பிடிஆர், “ரோஜா ரோஜாதான். ரோஜாவை யாராவது மல்லிகை என்று அழைப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக சட்டப்பேரவைக்கு வானதி சீனிவாசன் வந்துள்ளாரா?அல்லது ஒரு அரசியல் கட்சியின் பாதுகாவலராக வந்துள்ளாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.