ஈரானின் அணுஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அடிப்படையில் அந்நாட்டுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுக்கும் இடையில் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் குறைபாடு உள்ளதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா ஒப்பந்ததில் இருந்து வெளியேறியது. அதுமட்டுமல்லாமல் ஈரான்மீது பொருளாதார தடைகளையும் விதித்தது. இதையடுத்து ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்தது.
இதன் காரணமாக அணு சக்தி ஒப்பந்தம் நீர்த்துபோகும் அபாயம் உருவானது. அதன்பின் அணுசக்தி ஒப்பந்தத்தை தக்க வைப்பது குறித்து ஈரானுக்கும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கும் இடையில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் மறைமுக பங்கேற்பாளராக கலந்துகொண்டு வந்தது. தற்போது இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும், புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் உறுதி செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகிவந்தன.
இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனில் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.