சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு யார் பெயர் சூட்டினார் என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டியது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தான் என கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு விஷயமாகும்..!! எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டும் போது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது..
அப்போது எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருந்தார். அவர்தான் மருத்துவத்திற்கு என்று ஒரு தனி பல்கலைக் கழகத்தை உருவாக்கினார் எனவே அந்த பல்கலைக்கழகத்திற்கு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது. மேலும் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் நடித்ததால் தான் எம்ஜிஆர் புகழ் பெற்றார் என கூறப்பட்டுள்ளது. எம்ஜிஆர் இயற்கையிலேயே அனைவரையும் வசீகரிக்கும் தன்மை உடையவர்.” நீ முகம் காட்டினால் 30 லட்சம் ஓட்டுகள் உறுதி” என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் எம்ஜிஆர்.
உண்மை அவ்வாறு இருக்க இப்படி கட்டுக் கதைகளை கட்டி விடுவது திமுக அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் எம்ஜிஆருக்கு புரட்சி நடிகர் என்று பெயர் சூட்டியது கருணாநிதி தான் என கூறியுள்ளனர். கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் மாபெரும் வெற்றி பெற்றார். இதனாலேயே அவருக்கு புரட்சித் தலைவர் என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும் சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு கருணாநிதிதான் பெயர் சூட்டினார் என்று திமுக அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலை இதோடு கைவிடவேண்டும்.
ஏனெனில் எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்போதே அதாவது 1987 ஆம் ஆண்டு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மெட்ராஸ் என்று பெயர் சூட்டப்பட்டு விட்டது. அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன்மூலம் ஸ்டாலின் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதிதான் பெயர் சூட்டினார் என்று கூறுவது வடிகட்டிய பொய் என்பது அப்பட்டமாக தெரிகிறது. இனிவரும் காலங்களிலாவது இதுபோல் வரலாற்றை மாற்றி கூறி ஸ்டாலின் மாட்டிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..!!” இவ்வாறு அவர் கூறினார்.