தேனியில் தாயிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி இரும்பு கம்பியால் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் சொக்கர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பால்தாய் என்ற மனைவி இருந்தார். சொக்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து பால்தாய் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய இளைய மகன் பாலச்சந்தர். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு பால்தாயின் பெயரில் இருந்த வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார். இது குறித்து மற்ற இரண்டு மகன்களிடமும் பால்தாய் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பாலசந்தர் அடமானம் வைத்ததை அண்ணன்களிடம் ஏன் கூறினாய்? என்று கேட்டு பால்தாயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கோபமடைந்த பாலச்சந்தர் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து பால்தாயின் தலையில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த தாய் மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து பாலச்சந்தரை வலைவீசி தேடி வருகின்றனர்.