விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரம்(65), மாரிமுத்து(59) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தங்கசாமிக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தை பிரித்ததில் அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விவசாயியான மாரிமுத்து ஜேசிபி எந்திரம் மூலம் எலுமிச்சை செடிகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது சமுத்திரம் அங்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த சமுத்திரம் தனது மகன்களான தாளமுத்து, மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாரிமுத்துவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சமுத்திரம் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.