மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூரில் ஜட்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவராஜ் என்ற மகனும், நந்திதா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜட்ஜ் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு ஜட்ஜ் மோட்டார் சைக்கிளில் வெங்கனூரில் இருந்து வெண்பாவூருகு சென்றுள்ளார்.
இதனை அடுத்து கல்லாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜட்ஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தொழிலாளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.