அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டப் படிப்பின், முதலாம் ஆண்டிற்கான பழைய பாடத் திட்ட முறையை மாற்றி, புதிய பாடத்திட்டத்திற்கு கல்வி குழுவானது அனுமதி வழங்கியுள்ளது.
இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் பொறியியல் பாடத்திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் அறிமுகப்படுத்தப்பட்டது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொறியியல் படிப்பினை முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வந்த நிலையில், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அதன்படி நிகழ் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டமானது முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் புதிய பொறியியல் பாடத்திட்டத்தை முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு 2-வது பருவத்திலேயே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து பொறியியல் படிப்பிற்கான 4 ஆண்டு பாட திட்டங்களையும் மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய முதலாம் ஆண்டிற்கான பழைய பாடத் திட்ட முறையை மாற்றி, புதிய பாடத்திட்டத்திற்கு கல்வி குழுவானது அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த புதிய பாடத்திட்டத்தில் தொழில்துறையினர் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்திய தொழிற்கூட்டமைப்பு மகேந்திரா, எல் அண்ட் டி போன்ற தொழிற்சாலைகளின் பங்களிப்பானது அதிக அளவு இருக்கும் என தெரிகிறது.
இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தவும் மற்றும் தொழிற்சாலைகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு இந்த புதிய பாடத்திட்டம் முறையானது நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் இந்த மாற்றத்தினால் பொறியியல் படிப்பினை முடிக்கும் மாணவர்களுக்கு, எளிதில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.