ஊழல் முறைகேடு புகார், தமிழக அரசுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
சூரப்பா ஓய்வுபெறும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகத்தை இயக்கும் ஒருங்கிணைப்பு குழுவை தமிழக அரசோ, வேந்தர் பன்வாரிலால் புரோகித்தோ நியமிக்கவில்லை. சூரப்பாவின் பதவி காலத்தை நீட்டித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கேள்விக்குறியாக இருக்கிறது.
தமிழக அரசோ, வேந்தர் பன்வாரிலால் புரோகித்தோ இதுவரை தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று பதவி ஓய்வு பெறும் சூரப்பா கூறியுள்ளார். கடந்த ஆண்டில் அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் கழகங்களில் துணைவேந்தர் ஓய்வு பெறும் கடைசி நாளில் அவர்களின் பதவி காலத்தை நீட்டித்து வேந்தர் என்ற முறையில் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டதால் சர்ச்சை வெடித்தது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் சூரப்பா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். சூரப்பா மீது 200 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. கலையரசன் குழு சூரப்பா மீதான ஊழல் முறைகேடு புகார் குறித்து விசாரித்து வருகிறது.