காரைக்காலில் சென்ற சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தது. இதனையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பாக குடிநீர் எடுக்கும் பகுதி, குடிநீர் தொட்டி வாயிலாக விநியோகிக்கும் பகுதி, குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் போகும் பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் பாதிக்கப்பட்ட சிலரையும் பரிசோதித்த சூழ்நிலையில், அது காலராவுக்கான அறிகுறியாக தெரியவந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து காரைக்காலில் காலரா தொற்று அதிகரிப்பு காரணமாக பொதுசுகாதார அவசர நிலையை, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி ரோடு கண்ணகி நகர் பகுதியில் குடிநீர் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, புதுவை மாநிலமான காரைக்காலில் 39 நபர்கள் காலராநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையிலும் காரைக்காலை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான நாகப்பட்டினம், நாகூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தின் பகுதிகளில் பொது சுகாதாரத்துறையினர் நேரில் சென்று அங்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பொது இடங்களில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய் பரவல் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவற்றுக்கு தேவையான அளவு மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்களுக்கு காய்ச்சிய தண்ணீரை பருகுதல், உணவை நன்றாக வேகவைத்து உண்ணுதல் போன்ற விழிப்புணர்வுவை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம்” என அவர் கூறினார்.