ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. சீனாவின் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், ஷாங்காயில் அதிகரித்துவரும் கொரோனா இறப்புகளுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, நேற்று மட்டும் ஷாங்காயில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளனர். மேலும் பாதிப்பால், 19 பேர் இறந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியிருக்கின்றனர்.
சுமார் 40 லட்சம் மக்கள் கடுமையான கொரோனா கட்டுப்படுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சில தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த இரு வாரங்களில் கொரோனா பரவல் இல்லாத பகுதிகளில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும். இருப்பினும், இந்த தளர்வுகள் சீரற்றதாக உள்ளது என்றும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பலர் தங்கள் வீட்டு வளாகங்களை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாக இணையதளங்களில் மக்கள் புகார் அளித்திருக்கின்றனர்.