வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் நீரார் அணையில் படகு சவாரி ஆரம்பிக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பாக வாழைத்தோட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சியின் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா இருந்த நிலையில், அந்த பூங்காவை அகற்றிவிட்டு தற்போது படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் படகு இல்லத்தில் படகுகள் அனைத்தும் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை அடிப்படையில் படகு சவாரியும் நடத்தப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட அலுவலக பிரச்சனை காரணமாக படகு இல்லம் தற்போது செயல்படாமல் குப்பை கிடங்காக ஆகிவிட்டது. படகு இல்லத்தில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் துர்நாற்றம் வீச தொடங்கியது. தற்போது சமவெளிப் பகுதியில் கோடையின் தாக்கம் அதிகரித்து வெயில் வாட்டி வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக கோடை மழை தொடங்கி இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் வால்பாறை பகுதி முழுவதும் இதமான காலநிலை நிலவுகிறது.
இந்நிலையில் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகு இல்லத்திற்காக வாங்கி வைக்கப்பட்டுள்ள படகுகளை கொண்டு நீரார் அணையில் படகு சவாரி தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வருகிற மே மாதம் முழுவதும் நீரார் அணையில் படகு சவாரி செய்தால் பொதுப்பணித்துறைக்கு வருமானம் அதிகமாக கிடைப்பதுடன் சுற்றுலா பயணிகளும் சந்தோஷம் அடைவார்கள். மேலும் வால்பாறை பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவதால் தொழில்களும் முன்னேற்றமடையும். கடை வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே படகு சவாரி தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.