செல்போன் வந்த பிறகு மனித வாழ்க்கையானது உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது என்று கூறுவது மிகையாகாது. முதலில் பேசுவதற்கு பயன்பட்ட செல்போனாவது தற்பொழுது வீடியோ, போட்டோ எடுக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் ஆக மாறிய பிறகு அதை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும், உபயோகிக்கும் நேரமும் அளவுக்கு அதிகமாக உள்ளது.
உலகிலுள்ள பிரமிப்பான இடங்களையும், ஆபத்தான இடங்களையும் வீடியோ மற்றும் படங்கள் எடுக்கும் ஸ்மார்ட் போனைக் கொண்டு அவர்கள் தங்கள் செல்போனுக்குள் அடக்கி விடுகின்றனர். இந்த ஸ்மார்ட் போனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்பொழுது செல்ஃபி மோகத்தால் அதிகமாக அடிமையாக உள்ளனர்.
ஆபத்தான பகுதியான மலையின் உச்சிப் பகுதி, நீர்வீழ்ச்சி, வெள்ளம் கரை புரண்டு ஓடும் ஆற்றின் கரையோரம், கடலுக்குள் என பல்வேறு இடங்களில் செல்பி எடுத்து தங்களை மற்றவர்கள் முன் பெருமையாக காட்டிக் கொள்வதாக எண்ணி தங்களது உயிரை இழந்துள்ளனர். இதேபோல் இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டம் என்ற இடத்தில் செல்பி எடுத்த பொழுது அம்மா, மகன் மற்றும் இரு சுற்றுலா பயணிகள் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.