எல்லைப் பகுதிகளில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வைத்திரி, முத்தங்கா, சுல்தான், பத்தேரி, வயநாடு போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்களை மிரட்டி அரிசி, பருப்பு போன்ற பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இவர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது, துண்டு பிரசுரங்கள் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாவோயிஸ்டுகள் தமிழக-கேரள எல்லையில் வராமல் தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடுகாணி, சோலாடி, கோட்டூர், தாளூர், பூலக்குன்று, நம்பியார் குன்னு, பாட்டவயல் போன்ற பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொரியன்காப்பு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் திடீரென மர்ம ஆசாமிகள் நுழைந்துள்ளனர்.
இவர்கள் வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கியால் மிரட்டி உணவு அருந்தி விட்டு ஒரு நாள் இரவு தங்கியுள்ளனர். அதன்பிறகு மறுநாள் அங்கிருந்த உணவுப் பொருட்களை வாங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கவில்லை. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பந்தலூர் அருகே இருக்கும் சோதனை சாவடிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இவர் காவலர்களிடம் மர்ம நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.