ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறுவனின் விபரீத விளையாட்டால் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் திகைத்துப்போய் இருக்கின்றனர். ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் கணேசன் என்பவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ராமநாதபுரம் வண்டிக்கார தெருகடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு சிறுவன் அந்த போலீசை கேலி செய்யும் வகையில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளான். இப்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த வீடியோ வைரலானது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்போது சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வாயிலாக காணொளிகளை ரிலீஸ் செய்வது பேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமை அடுத்து பேஸ்புக்கிலும் ரீல்ஸுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இச்சூழலில் ரீல்ஸுக்காகவும், லைக்ஸ் வாங்குவதற்காகவும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் செய்யும் ஒழுங்கீன செயல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆகவே இந்த ரீல்ஸ் மோகம் சிறுவர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.