சிவகங்கையில் இதுவரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்களிடம் ரூ.4 3/4 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சிங்கையில் கொரோனா தொற்றை தடுக்க மருத்துவ அலுவலர்கள் தலைமையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளி பின்பற்றாமல் செல்பவர்களுக்கும், அரசு வழிகாட்டுதலின்படி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் குழு அமைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கையில் அனைத்து நகராட்சிகள் மற்றும் வட்டார பகுதிகளை சேர்த்து இதுவரை ரூ. 4 லட்சத்து 88 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தினமும் 15 முதல் 20 தடவை பொதுமக்கள் அனைவரும் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் வெளியில் செல்லும்போது முக கவசத்தை அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து நடக்க வேண்டும். மேலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி கூறியுள்ளார்.