சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளாப்பூர், எஸ்.எஸ்.கோட்டையில் கொரோனா பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் கொரானா குறித்து எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு இதற்கு முன்னதாக மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்து பாடம் நடத்தினார். மேலும் அவர்களிடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு, கடைகளுக்கு, தெருக்களுக்கு செல்லும்போது முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் வீட்டில் உள்ளவர்களும் கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
உடம்பில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் இருந்தால் மருத்துவமனையில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் சார்ந்த நோய்கள் ஏதேனும் இருக்கிறதா என்று மருத்துவர் முத்தமிழ் செல்வி தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டார். மருத்துவர் பரணி ராஜன் மற்றும் செந்தில்குமார் தலைமையில் காளாப்பூரில் சமுதாய கூடத்தில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற மற்ற கிருமிகள் சார்ந்த நோய்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி அருகில் உள்ள பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செய்திருந்தது.