திருப்பூர் மாவட்டத்திற்கு புகழ் சேர்க்கும் காங்கேயம் இன மாடுகளின் பாலுக்கு என தனியான சந்தை உருவாக்கும் விதமாக பால் கொள்முதல் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கேயம் ரக நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றார்கள். காங்கேயம் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு தோன்றியதனால் ஊரின் பெயரிலே இந்த இன மாடுகள் அழைக்கப்படுகிறது. இந்த காங்கேயம் இன காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், ஜல்லிக்கட்டில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை ஆகும். அதேபோல குறைவான தீவனத்தை உண்டு சத்தான பால் தரும் காங்கேயம் இன பசுக்களை கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து செல்லும் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக தருவது பாரம்பரிய மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பா அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் சாதாரண பாலுக்கும் A2 ரக பாலுக்கும் அதிக விலை வித்தியாசம் இருக்கிறது.
ஏனென்றால் அங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் A2 ரக பாலுக்கு கடும் கிராக்கி இருக்கிறது.இதன் காரணமாக அந்த நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளிலிருந்து A2 ரக பாலை இறக்குமதி செய்கின்றனர். தற்போது மக்கள் இயற்கை சார்ந்த பொருட்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றது. இதனால் காங்கேயம் இன நாட்டு மாட்டு பால் தேவையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி பாப்பினி பகுதியைச் சேர்ந்த விவசாய வேலுசாமி பேசும்போது தற்போது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி உணவுப்பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
இதுபோல நகரப் பகுதிகளில் நாட்டு மாட்டு பால் கிடைப்பது அரிதான ஒன்றாகும். அதனால் காங்கேயம் நாட்டு மாட்டு பால் தேவை இருப்போருக்கு வழங்கும் வகையிலும் விவசாயிகளிடையே இந்த இன மாடுகளை அதிக அளவில் வளர்க்கும் நோக்கத்திலும் விற்பனை மையத்தை அமைத்து கண்ணாடி குடுவைகளில் அடைத்து திருப்பூர் போன்ற நகரங்களுக்கு அனுப்பினால் நல்ல விலை கிடைக்கும். அதே நேரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கும் வருவாய் கிடைக்கும் கூட்டுறவு சங்கம் தோற்றுவித்ததற்கான நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் திருப்பூர் ஆவின் நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றார்கள். வரட்சியான பகுதியில் மட்டுமே வளர்க்கப்பட்டு வரும் காங்கேயம் இன பசு மாடுகள் மற்றும் காளைகள் அந்த பகுதியில் கிடைக்கும் தீவனங்களை உண்டு வருவதனால் இந்த பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காங்கேயம் கால்நடைகள் தங்களை தகவமைத்துக் கொள்வதினால் காங்கேயம் நாட்டு மாட்டு பால் எந்த காலநிலையிலும் எந்த வயதினரும் அருந்தும் விதமாக இருக்கிறது. இதன் தேவையை கருதி கால்நடை துறையும் முன் முயற்சி எடுத்து பால் கொள்முதல் நிலையம் அமைக்க ஊக்குவிப்பு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.