சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரத்து 943 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 11 லட்சத்து 77 ஆயிரத்து 796 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி பயன்பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்துள்ளார்.