போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 3 தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள திருத்தேர் சத்யா நகரில் சிவனேசன்-அமுல் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் சந்துரு உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சந்துருவின் பெற்றோர் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்குமிடையில் போர் நடப்பதால் தன்னுடைய மகனை வீட்டிற்கு திரும்பி வருமாறு கூறியுள்ளனர். இதற்காக ரூபாய் 35 ஆயிரம் பணத்தை சந்துருவின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். அதனை எடுத்துக்கொண்டு சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் புவனேஸ்வரன், ஹரிஹரன் ஆகியோர் டிக்கெட் முன்பதிவு செய்து துபாய்க்கு விமானம் மூலம் வந்துள்ளனர். அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளனர்.
இதுகுறித்து சந்துரு நாங்கள் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறோம். திடீரென ரஷ்யா உக்கிரனை தாக்கியதை அடுத்து பல இடங்களில் குண்டுகளை போட்டு வருகிறது. இதனால் நாங்கள் மிகவும் பயந்து விட்டோம். எப்படியாவது ஊருக்கு திரும்பி வந்தால் போதும் என்ற எண்ணத்தில் திரும்பி வந்துள்ளோம். மேலும் எங்களைப் போன்ற 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர். அவர்கள் போர் பதற்றம் காரணமாக சுரங்கங்களில் தங்கி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் உணவின்றி தவித்து வருகின்றனர். எனவே அவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஆவடி நகர் பகுதியில் சுடர்மணி-கிரிஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களுடைய மகன் சரண் பிரகாஷ் உக்ரைனில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருவதால் தன்னுடைய மகனை மீட்டுத் தரும்படி அரசுக்கு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி தன் மகனைப் போல அங்கு படிக்கும் மற்ற மாணவர்களையும் மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.