கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ராமர் கோவில் தெருவில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பவானி அதே பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரிடம் கேட்டரிங் தொழில் தொடங்குவதற்காக 2 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் பவானி வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் விஜயலட்சுமி அவரது வீட்டிற்கு சென்று அடிக்கடி கடனை திரும்ப கேட்டுள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் பணத்திற்கான காசோலையை பவானி விஜயலட்சுமியிடம் கொடுத்தார்.
ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்பி வந்தது. இதனால் விஜயலட்சுமி மீண்டும் பவானியின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெயபிரகாஷ் பவானியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவானி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.