Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல்…. “8 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்”… தீவிர விசாரணை…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துறைமுகம் வழியாக மலேசியாவில் இருக்கும் போர்ட் கிலாங் துறைமுகத்துக்கு செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகாரிகள் நேற்று தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இருக்கும் தனியார் சரக்கு பெட்டக குடோனில் சோதனை நடத்தியபோது அங்கு மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 9 பெரிய மரப் பெட்டிகளில் இரும்பு குழாய்கள் வைத்து மூடப்பட்டு இருந்தன.

அதனின் எடை 12 டன்னாக இருந்தது. இதனால் அதிகாரிகள் சந்தேகப்பட்டு அதை திறந்து பார்த்த பொழுது பெட்டியின் மேல் பகுதியில் இரும்பு குழாய்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. பின் பக்கவாட்டில் இருக்கும் பலகையை அகற்றிப் பார்த்தபோது இரும்பு குழாய்களுக்கு அடியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இரும்புக் குழாய் போல காட்சியளிப்பதற்காக செம்மர கட்டைகள் மீது கருப்பு நிற பாலித்தீன் கவர் சுற்றப்பட்டிருந்தன.

அந்தப் பெட்டியின் அடிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 8 டன் செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். அதன் மதிப்பு ரூபாய் 5 கோடி என கூறுகின்றார்கள். அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அந்த மரப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டதற்கான சான்றாக ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் செம்மர கட்டைகளை கடத்த முயன்றவர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |