சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லறை விற்பனை ) கா.வேலுமணி தலைமையிலான குழுவினர் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபானக் கடத்தல்களை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்கரை ஆற்றுபாலம் அருகில் சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் முருகேசன் என்பதும், அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்த 14 மது பாட்டில்களையும், ரூ.1,650 பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் மதுவிலக்கு காவல்நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களையும், அவரையும் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து மது விற்பனையில் ஈடுபட்ட முருகேசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.