பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர் முககவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை கண்டித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேனி வாரசந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வாரசந்தை கடைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வியாபாரிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வார சந்தைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அப்போது அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் முக கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதனை பார்த்த ஆட்சியர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை முககவசம் அணியும்படி கண்டித்துள்ளார். இதனையடுத்து மதுரை சாலையில் உள்ள கடைகளை ஆய்வு செய்தபோது அப்பகுதியில் இருந்த ஒரு செல்போன் கடை கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதால் அந்த கடைக்கு சீல் வைக்கபட்டுள்ளது.
அதேபோல் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள நரசிங்கபுரம் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமித்ததாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்துள்ளனர்.