திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை சபாநாயகர் அப்பாவும் துவங்கி வைத்தார். அதோடு அவர் துப்புரவு பணியாளர்களுக்கு 84 பேட்டரி வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பிறகு அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அதில் கூறியதாவது, “தமிழகத்தைப் பொருத்தவரை வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருகிறது. எனவே அரசு அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் சீராக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை 82 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி 52% பேர் செலுத்தியுள்ளனர். 15 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் 77 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் 9 கட்டிடங்கள் கூடுதலாக கட்டப்பட உள்ளது. மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு 54 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை பகுதியில் கடைகள் அதிக விலைக்கு ஏலம் விடப்படுவதாக கூறி பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனி சட்டம் உள்ளது. அது போல் தான் ஒவ்வொரு கடைக்கும் தனி விலை எனவே அந்த கடைகள் இருக்கும் இடத்தை பொறுத்து அதன் விலையில் மாற்றம் ஏற்படும். இதற்காக சிலர் போராட்டம் நடத்தி வருவது மிகவும் தவறான செயல்.” இவ்வாறு அவர் கூறினார்.