அதிகாரிகள் போல நடித்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணி மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சுப்ரமணியின் மோட்டார் சைக்கிளை நிறுத்திய மர்மநபர் ஒருவர் தன்னை வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு சுப்பிரமணியை மிரட்டி அந்த நபர் 1 பவுன் தங்க மோதிரத்தை பறித்து விட்டு தப்பி சென்றார்.
இதேபோல் காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரிடம் மர்மநபர் 1 லட்ச ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் அதிகாரி போல் நடித்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அப்துல் சலீமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 1 1/2 பவுன் தங்க நகை, 75 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.