ஈரோட்டில் மெடிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் நோயாளிகளுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், ஈ.வி.என் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவமனைக்கு சொந்தமான மெடிக்கல் கடை செயல்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணியை முடித்து விட்டு மெடிக்கல் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பூட்டப்பட்டிருந்த மெடிக்கல் கடையில் இருந்து திடீரென்று கரும்புகை வெளிவந்துள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மருந்து கடையில் பற்றிய தீயை அணைத்தார்கள். இந்த தீ விபத்தினால் மெடிக்கல் கடையில் உள்ள மருந்துகள், குளிர்சாதனப்பெட்டி எனப் பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.