சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி பல்லாவரம், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அடையார், கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி மற்றும் ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகள்,வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.